கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜினாமாவிற்கு, அமித்ஷாவே காரணம் -சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இருவர் ராஜினாமா செய்ததற்கு, பாஜக தலைவர் அமித்ஷா தான் காரணம், என முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிஹோலி ஆகிய எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா பின்னணியில், பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கோடிக்கணக்கில் பணம் மற்றும் பதவிகளை தருவதாக ஆசை காட்டி, எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதாகவும், ஆனால், ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது என்றும் கூறினார்.
மேலும், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இருவரும் பாஜகவில் சேர வாய்ப்பில்லை என்றும் சித்தராமையா கருத்து தெரிவித்தார். கர்நாடக முதல்வர் குமாரசாமி தற்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில், மேலும் 6 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.