தனியார் பள்ளிகள் கட்டாயம் 25 சதவீதம் ஏழை குழந்தைகளை இலவசமாக சேர்க்க வேண்டும் - மத்திய மந்திரி அறிவிப்பு

தனியார் பள்ளிகள் கட்டாயம் 25 சதவீதம் ஏழை குழந்தைகளை இலவசமாக சேர்க்க வேண்டும் என மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

Update: 2019-07-01 23:00 GMT
புதுடெல்லி,

அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீதம் ஏழை குழந்தைகளை 1-ம் வகுப்பு அல்லது அதற்கு கீழே உள்ள வகுப்புகளிலேயே கட்டாயம் இலவசமாக சேர்க்க வேண்டும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

மக்களவையில் மத்திய மனிதவள மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று கூறியதாவது:-

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ) 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் 6 முதல் 14 வயதுள்ள அனைத்து குழந்தைகளும் தொடக்க கல்வி பெறுவதை அடிப்படை உரிமை ஆக்குகிறது.

இந்த சட்டத்தின் 12-வது பிரிவின்படி அனைத்து அரசு உதவிபெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், சிறப்பு பிரிவு பள்ளிகள் 1-ம் வகுப்பு அல்லது அதற்கு கீழே உள்ள வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் அளவுக்கு ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகளை சேர்த்து தொடக்க கல்வி முடியும் வரை இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும்.

அந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிப்பதால் ஏற்படும் செலவுகளை அல்லது அந்த குழந்தையிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தை இதில் எது குறைவோ அதனை அந்தந்த மாநில அரசுகள் அந்த பள்ளிகளுக்கு திருப்பித்தர வேண்டும்.

குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலமோ, கட்டிடமோ, கருவிகளோ அல்லது இதர வசதிகளையோ, இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பெற்றிருந்தால் அந்த பள்ளிகள் குழந்தைகளுக்கான கட்டண தொகையை திரும்பப் பெறமுடியாது.

கல்வியும், பெரும்பான்மையான பள்ளிகளும் தற்போது மாநில அரசுகளின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் ஆர்.டி.இ. சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்