பஸ் டே கொண்டாடிய விவகாரத்தில் மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவு

சென்னையில் பஸ் டே கொண்டாடிய விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-19 16:03 GMT
சென்னை,

பஸ் தினம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னையில் அரங்கேறி தான் வந்தது. தங்கள் கல்லூரி வழியாக செல்லும் மாநகர பஸ்சை சிறை பிடித்து பஸ்சின்  முன்பகுதியில் பேனர், மாலை கட்டிவிடுவார்கள். கல்லூரி வரையில் ஆடிப்பாடிக்கொண்டே செல்வதற்கு வசதியாக பஸ்சை மெதுவாக இயக்க சொல்லி டிரைவர், கண்டக்டர்கள் மிரட்டப்படுவார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வந்தனர். 

இந்த பஸ் தினம் சிலவேளைகளில் மாணவர்கள் இடையே மோதல் உருவாகவும் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக சென்னையில் பஸ் தினம் கொண்டாட ஐகோர்ட்டு தடை விதித்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. போலீசாரும் இந்த விஷயத்தில் தீவிரமாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பின்னர் சென்னையில் நேற்று முன்தினம் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதற்காகவே எதிர்பார்த்து இருந்ததுபோல கல்லூரி மாணவர்கள் அன்றைய தினம் தடையை மீறி பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்சுக்குள் கூச்சலிட்டபடி வந்தனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கலாட்டாவில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். சென்னையில் நேற்று முன்தினம் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கீழ்பாக்கம் போலீசார் கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து பஸ் டே கொண்டாடிய மாணவர்கள் 9 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.  

மேலும் கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையவும் அனுமதி மறுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு  கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்