இந்தியன் ரெயில்வே வரலாற்றில் முதல்முறையாக ரெயில்களில் இனி மசாஜ் சென்டர்கள்!
இந்திய ரெயில்வே வரலாற்றில் முதல்முறையாக ரெயில்களில் மசாஜ் சென்டர்களை திறக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். ரெயில்களில் பயணிக்கும் மக்கள் தினசரி பல இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். ரெயில் பயணிகளுக்கு, பாதுகாப்பான பயணத்தை அளிக்க ரெயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நீண்டதூர பயணிகளுக்கு களைப்பு, சலிப்பு தெரியாமல் இருக்க ரெயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. கோல்ட், டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த மசாஜ் வசதி ரெயில்களில் இரவு நேரங்களில் (10 மணி முதல் காலை 6 மணி வரை) கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15-லிருந்து 20 நிமிடங்கள் கால் அல்லது தலை மசாஜ் சேவைக்கு ரூ.100 வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த 15 அல்லது 20 நாட்களில் நடைமுறைக்கு வரும் இந்த சேவை முதற்கட்டமாக இந்தூரில் இருந்து மத்தியபிரதேசம் செல்லும் 39 ரெயில்களில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த ரெயில்களில் 3 அல்லது 5 மசாஜ் ஊழியர்கள் வரை பயணம் செய்வார்கள். இந்திய ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்வே துறை ஆண்டுக்கு 20 லட்சம் முதல் 90 லட்சம் வரை லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.