புதிய கல்வி கொள்கை அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது “இந்தி மொழி கட்டாயம் இல்லை” 3-வது மொழி பாடத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்ள அனுமதி

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

Update: 2019-06-04 00:15 GMT
புதுடெல்லி, 

புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்தது.

அறிக்கை தாக்கல்

இந்த குழு கடந்த 31-ந் தேதி தனது வரைவு அறிக்கையை மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் தாக்கல் செய்தது.

483 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் மும்மொழி கொள்கை, வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் பள்ளி கல்வியை மாற்றி அமைப்பது, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இந்தியாவில் மும்மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்திக்கு எதிர்ப்பு

இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை 6-ம் வகுப்பில் இருந்து தொடங்கவேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநில மொழியையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாகவும், இதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூறினார்கள்.

அதேசமயம், தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்தார்.

திருத்தம்

இதனால் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது. எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும், வரைவு அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு அறியப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளி யுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கூறினார்கள்.

என்றாலும் தமிழகத்தில் எதிர்ப்பு ஓயவில்லை.

இதைத்தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை தொடர்பான கஸ்தூரிரங்கன் குழுவின் வரைவு அறிக்கையில் மாற்றம் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. அதன்படி சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள அந்த திருத்தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்தி கட்டாயம் இல்லை

திருத்தப்பட்ட புதிய வரைவு அறிக்கையின்படி, தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதாவது, இந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு இருக்கிறது.

மூன்றாவது மொழி பாடத்தை மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், பள்ளி ஆண்டு இறுதித்தேர்வில் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்த முடியும் என்று நம்பும் வரையில் 6 அல்லது 7-வது வகுப்புகளில் தாங்கள் தேர்வு செய்த மொழிப்பாடங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வில் மொழிப்பாட தேர்வுகள் மாணவர்களின் அடிப்படை திறமையை பரிசோதிப்பதாக மட்டுமே இருக்கும் வகையிலும் இந்த திருத்தம் அமைந்து இருக்கிறது.

மாணவர்கள்

மாணவர்கள் 3 மொழிகளை படிக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றபோதிலும், தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்து படிக்கலாம் என்பது மாணவர்களின் விருப்பத்துக்கே விடப்பட்டு இருக்கிறது.

எனவே தாங்கள் படிக்க விரும்பும் 3-வது மொழியை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்