ராணுவ மந்திரியாக பதவி ஏற்ற பின் முதல் பயணம் ராஜ்நாத் சிங் இன்று சியாச்சின் செல்கிறார்

ராணுவ மந்திரியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக ராஜ்நாத் சிங் இன்று சியாச்சின் செல்கிறார்.

Update: 2019-06-02 22:30 GMT
புதுடெல்லி, 

ராணுவ மந்திரியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக ராஜ்நாத் சிங் இன்று சியாச்சின் செல்கிறார்.

முதல் பயணம்

மீண்டும் அமைந்த நரேந்திர மோடி அரசில், ராஜ்நாத் சிங் ராணுவ மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பனிசிகரத்துக்கு செல்கிறார். ராணுவ மந்திரியான பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். அவருடன் ராணுவ தளபதி பிபின் ரவத்தும் செல்கிறார்.

ராஜ்நாத் சிங், டெல்லியில் இருந்து லடாக்கில் உள்ள உயரமான விமான தளத்துக்கு போய் சேருகிறார். அங்கிருந்து ராணுவ தளத்துக்கு செல்கிறார். பின்னர், சியாச்சின் பனிசிகரத்தை சென்றடைகிறார். அங்கு களத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களுடன் உரையாடுகிறார்.

தயார்நிலை

மேலும், லேவில் உள்ள ராணுவத்தின் 14-வது படைப்பிரிவு தலைமையகத்துக்கும், ஸ்ரீநகரில் உள்ள 15-வது படைப்பிரிவு தலைமையகத்துக்கும் ராஜ்நாத் சிங் செல்கிறார். அங்கு ராணுவத்தின் தயார்நிலை குறித்து அவருக்கு ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.

பாகிஸ்தானின் எத்தகைய அத்துமீறலையும் சந்திக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை எடுத்துரைக்கிறார்கள். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் ஆகியவற்றையும் விளக்கி கூறுகிறார்கள். பின்னர், இன்று மாலையே ராஜ்நாத் சிங் டெல்லி திரும்புகிறார்.

உயரமான போர்க்களம்

சியாச்சின் பனி சிகரம், உலகிலேயே உயரமான, ஆபத்தான போர்க்களமாக கருதப்படுகிறது. தரைமட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் அது அமைந்துள்ளது. குளிர்காலத்தில் அங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுவது வழக்கம். அதில், ராணுவ வீரர்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குளிர் காலத்தில், மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் என்ற உறைநிலைக்கு வெப்பநிலை சென்று விடும். அத்தகைய நடுங்க வைக்கும் குளிரில் ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தியாவும், பாகிஸ்தானும் 1984-ம் ஆண்டில் சியாச்சினில் ராணுவத்தை நிறுத்த தொடங்கின. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு 165 ராணுவ வீரர்களை இந்தியா இழந்துள்ளது.

மேலும் செய்திகள்