40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வென்றால் பிரதமர் மோடி தூக்கில் தொங்குவாரா? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வென்றால், பிரதமர் மோடி தூக்கில் தொங்குவாரா என மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2019-05-12 23:00 GMT
பெங்களூரு,

காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களை பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் அந்த கட்சி 40 தொகுதிகள் கூட வெல்ல முடியாது என பிரதமர் மோடி கூறி வருகிறார். இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் சிஞ்சோலி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகிறவர்கள் இங்கிருக்கும் மக்களாகிய நீங்கள்தான். இந்த தொகுதியின் வேட்பாளரான சுபாஷ் மற்றும் எங்களைப் போன்றவர்களின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. அது மோடியிடமோ அல்லது பா.ஜனதாவிடமோ இல்லை. ஆனால் மோடி செல்லும் இடங்களில் எல்லாம், காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கூட பெறாது எனக்கூறி வருகிறார். இதை நீங்கள் யாராவது ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படி நாங்கள் 40 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டால், டெல்லி விஜய் சவுக் பகுதியில் மோடி தூக்கில் தொங்குவாரா?’ என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவருக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா எம்.பி.யான சோபா கரண்ட்லஜே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்