கடும் பனிப்பொழிவு; பசியால் உயிரிழந்த 300 காட்டெருதுகள்
வடக்கு சிக்கிமில் கடந்த ஆண்டு இறுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 300 காட்டெருதுகள் உயிரிழந்துள்ளன.
டிசம்பர் 2018-ம் ஆண்டு கடும் பனிப்பொழிவு காரணமாக முகுந்த்நாக் மற்றும் யும்தாங்கில் சிக்கிக்கொண்ட 300 காட்டெருதுகள் உயிரிழந்துள்ளன என வடக்கு சிக்கிம் மாஜிஸ்திரேட் ராஜ் யாதவ் கூறியுள்ளார். முகுந்த்நாக் பகுதியில் 250 எருதுகளும்,யும்தாங்கில் 50 எருதுகளின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து பனிப்பொழிவு காணப்பட்டதால் அங்கிருந்து செல்ல முடியாமல் எருதுகள் பசியால் உயிரிழந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விலங்குகளுக்கு நல ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். இப்போது உயிருடன் இருக்கும் விலங்குகளுக்கு உணவு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த எருந்துகள் அங்குள்ள 25 குடும்பத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. எருதுகளில் பால் கறக்கும் அவர்கள் பனிப்பொழிவின் போது கவனம் செலுத்துவது கிடையாது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே பனிப்பொழிவு காரணமாக விலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமாக பயணம் செய்ய வானிலை மோசமானதால் முடியாமல் சென்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் சிக்கியிருக்கும் பகுதிக்கு 5 கிலோ மீட்டர் சாலையில் படர்ந்துள்ள பனியை அகற்றவேண்டிய நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.