ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை - சிபிஐ தகவல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-05-10 10:37 GMT
புதுடெல்லி,

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி, மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தையும், இந்திராணி முகர்ஜியையும் சிபிஐ பலமுறை விசாரித்தது. இதில் கார்த்தி சிதம்பரத்திற்கு தான் லஞ்சம் கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி கூறி இருந்தார்.

இந்த விவகாரத்தில் தான் அப்ரூவராக விரும்புவதாக கோர்ட்டில் ஏற்கனவே இந்திராணி முகர்ஜி மனு அளித்திருந்தார். இது தொடர்பாக சிபிஐயிடம் டெல்லி பட்டியாலா ஹவுஸ் கோர்ட் கருத்து கேட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்க மே 23 ம் தேதி பட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்திராணி முகர்ஜி அப்ரூவராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதால் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்