ராஜீவ்காந்தி கொலை கைதிகள்: 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்வதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு எதிராக, அந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிர் இழந்த 14 பேர்களில் மூன்று பேரின் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாஸ், ஜான் ஜோசப், மாலா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன், மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மகன் ராம சுகந்தன் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டில் அதே ஆண்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
அரசியல் நோக்கம்
தமிழக அரசு, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் நலனை மட்டுமின்றி அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனநிலை மற்றும் சமூகம் குறித்தும் அக்கறை காட்டி இருக்க வேண்டும். இந்த குற்றவாளிகளை விடுதலை செய்வதாக எடுத்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டதோடு, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது ஆகும்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது மற்றும் அவர்களை விடுதலை செய்வது போன்றவை கவர்னர் மற்றும் ஜனாதிபதியின் அதிகார வரம்புக்கு உட்பட்டது ஆகும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
விசாரணை
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் வந்தனா சின்கா, பேரறிவாளன் சார்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியன், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி, மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரி கடிதம் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், எனவே விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கவர்னர்
அப்போது பேரறிவாளன் தரப்பு வக்கீல் ஒரு வாதத்தை முன்வைத்தார்.
அவர் வாதாடுகையில், “சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி வழங்கிய தீர்ப்பில் இந்த விவகாரம் தொடர்பான அனைத்தும் முடிவுக்கு வந்து உள்ளது. எனவே, இந்த வழக்கை நிலுவையில் வைத்து இருக்க வேண்டிய தேவை இல்லை. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சிறையில் உள்ள 7 பேர்களின் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதை தமிழக கவர்னர் ஒத்திவைத்து இருக்கிறார். எனவே இந்த வழக்கை மேலும் நிலுவையில் வைக்க தேவை இல்லை” என்று கூறினார்.
மனுக்கள் தள்ளுபடி
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பில் ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டு இருப்பதால், தாங்கள் இதில் தலையிட தேவை இல்லை என்று கூறி, 7 பேரின் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்று கூறியது.
இதைத்தொடர்ந்து, அவர் கள் தங்களை விடுதலை செய்யக்கோரி கவர்னரிடம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு நிலுவையில் உள்ளது.