ஓட்டு ஒப்புகை சீட்டு மனு தள்ளுபடி: தேர்தல் கமிஷனிடம் எதிர்க்கட்சிகள் முறையீடு

ஓட்டு ஒப்புகை சீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் முறையிடப்பட்டது.

Update: 2019-05-07 23:15 GMT
புதுடெல்லி,

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகும் ஓட்டுகளில் 50 சதவீதத்தை விவிபாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன. அப்போது 5 சதவீத ஓட்டுகளை ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியதால் அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் சீராய்வு மனுதாக்கல் செய்தன. அந்த மனு நேற்று மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்து ஒப்புகை சீட்டு விவகாரம் குறித்து முறையிட்டனர்.

பின்னர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேர்தல் கமிஷன் எங்கள் கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதாக தெரிவித்தது. ஆனால் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் சதவீதத்தை உயர்த்துவது குறித்து எந்த உறுதியையும் தரவில்லை என்றார்.

மேலும் செய்திகள்