முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஊழலில் நம்பர் ஒன் - பிரதமர் மோடி தாக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஊழலில் நம்பர் ஒன் என பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் படோஹியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:-
எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரபேல் ஊழல் விவகாரத்தில் என்னை குற்றம்சாட்டி வருகிறார்.
உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். 1980களில் காங்கிரஸ், ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.
எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமான அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த மோடி, பிறக்கும் போதே தங்க தட்டில் சாப்பிடவில்லை, வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை.
சவுதி இளவரசரிடம் நான் விடுத்த கோரிக்கையை ஏற்று 850 இந்தியர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். பல நாடுகளில் முத்தலாக் முறை நடைமுறையில் இல்லை.
பல முஸ்லிம் நாடுகள் பின்பற்றும் நடைமுறையை இந்திய இஸ்லாமிய சகோதரிகளுக்கும் தர விரும்புகிறோம். ஆண்கள், பெண்களுக்கு சம உரிமையை அரசியல் சாசனம் தந்துள்ளது. யாருடைய மத நம்பிக்கையையும் அவமதிக்கவில்லை. அரசியல் சட்டத்தையே பின்பற்றுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த ராகுல்காந்தி, என் தந்தையைப் பற்றிய உங்கள் உள் நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது என்றார்.