இந்திய பிரதமராக மோடி நீடிப்பதை இம்ரான்கான் ஏன் விரும்புகிறார்? - ப.சிதம்பரம் கேள்வி

இந்திய பிரதமராக மோடி நீடிப்பதை இம்ரான்கான் ஏன் விரும்புகிறார் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-05-03 21:15 GMT
புதுடெல்லி,

இந்திய பொதுத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது, மசூத் அசாரை அப்போதைய பா.ஜனதா அரசு விடுதலை செய்தது. பின்னர், 2008-ம் ஆண்டு, மும்பை தாக்குதலுக்கு மசூத் அசார் மூளையாக செயல்பட்டான். அதையடுத்து, அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கை, 2009-ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்டது. அப்பணி தற்போது முடிவடைந்து, மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மோடி பிரதமராக நீடிக்க வேண்டும் என்று இம்ரான்கான் ஏன் விரும்புகிறார்? இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்