மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி: அரசியல் தோல்வி ஏற்படுமோ என்று ஐ.நா. முடிவை கொண்டாட தயங்குகிறது - காங்கிரஸ் மீது அருண்ஜெட்லி தாக்கு
காங்கிரஸ் அரசியல் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தால் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. அறிவித்ததை கொண்டாட தயங்குகிறது என்று அருண் ஜெட்லி கூறினார்.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:–
ஐ.நா.வின் அறிவிப்பில் புல்வாமா தாக்குதல், காஷ்மீர் தாக்குதல்களில் மசூத் அசாரின் பங்கு பற்றிய தகவல்கள் இல்லாதது வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் கூறுவதை ஏற்க முடியாது. ஐ.நா.வின் அறிவிப்பு மசூத் அசாரின் வாழ்க்கை குறிப்பு அல்ல. அவரது ஒவ்வொரு நடவடிக்கைகள் பற்றியும் விவரமாக குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
இதில் முக்கியமான விஷயம் அசார் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது மட்டுமே. இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியது அவரும், அவரது நாடும் தான்.
இந்த பிரச்சினையில் இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்ததில் இப்போது பிரதமர் மோடி அரசு வெற்றிபெற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படக்கூடிய விஷயம். ஒட்டுமொத்த நாடே மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பாராட்டி வருகிறது.
ஆனால் இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், தான் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டால் அரசியல் ரீதியான விலையை (தோல்வி) கொடுக்க வேண்டியது வருமோ என்று எதிர்க்கட்சி (காங்கிரஸ்) கருதுகிறது. அதனால் தான் இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என கேட்கிறது.
அசார் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டதை பா.ஜனதா அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் தேசியவாதம் தான் எப்போதுமே பா.ஜனதாவின் முக்கிய கொள்கை. இப்போது இந்த பிரச்சினை இதில் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
காங்கிரஸ் தேசவிரோத சட்டத்தை நீக்குவோம், ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்வோம் என்று எப்போது அறிவித்ததோ, அப்போதே தேச பாதுகாப்பில் அதன் நிலை பா.ஜனதாவுக்கு எதிரானது என்பது தெரிந்துவிட்டது.
2008–ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றபோது பாதுகாப்பு படைகள் தாக்குவதற்கு தயாராக இருந்தபோதும் மன்மோகன்சிங் அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 25 பயங்கரவாதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்தது. அதில் ஒருவர் பின்னர் பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டார்.
மத்திய அரசு எல்லை தாண்டி வான் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழித்தது. அப்போதும் எதிர்க்கட்சி பதான்கோட் தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என சந்தேகம் எழுப்பியது.
பா.ஜனதா மீண்டும் அரசு அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இம்ரான்கான் கூறியிருப்பது, பா.ஜனதா வெற்றிபெற வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக அர்த்தம் இல்லை. பா.ஜனதா தான் வெற்றிபெறும், காங்கிரசால் வெற்றிபெற முடியாது என்பது இந்த உலகத்துக்கே தெரிந்திருக்கிறது என்று தான் அர்த்தம்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் உடன் இருந்தார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:–
ஐ.நா.வின் இந்த அறிவிப்பு இந்தியாவின் தொடர் நடவடிக்கையால் கிடைத்தது. இதற்கு ஒரு அரசு மட்டுமே காரணம் என்று கருதக்கூடாது. ஒவ்வொன்றுக்கும் நீங்கள் தான் காரணம் என்று கூறுவதையும், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதையும் முதலில் நிறுத்துங்கள். ஜம்மு சிறையில் இருந்து மசூத் அசாரை விடுவித்ததும் நீங்கள் தான் என்பதை நாட்டுக்கு சொல்லுங்கள்.
நாங்கள் மும்பை தாக்குதலுக்கு பின்னர் ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க வைத்தோம். அவர் மட்டுமல்ல, ஜாகிர் ரஹ்மான் லக்வி மற்றும் இதர பயங்கரவாதிகளையும் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கவைத்தோம்.
பாகிஸ்தான் அரசு இது தங்கள் வெற்றி என்றும், புல்வாமா தாக்குதல், காஷ்மீர் தாக்குதல்கள் பற்றிய தொடர்புகளை நாங்கள் நீக்கியதால் தான் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டார் என்றும் கூறுவதற்கு எங்கள் கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்.
ஆனால் இது முக்கியமான பிரச்சினை என்பதால் பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் புல்வாமா தாக்குதலில் அசாருக்கு நேரடி பங்கு உள்ளது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கும் மந்திரிகள் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.