தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் மோதல்: காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார்

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார்.

Update: 2019-04-15 20:00 GMT
மும்பை,

நடிகை ஊர்மிளா மடோங்கர் பிரசாரத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த ஊர்மிளா மடோங்கர் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரினார்.

நாடாளுமன்ற தேர்தலில் வட மும்பை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இந்தி நடிகை ஊர்மிளா மடோங்கர் போட்டியிடுகிறார். இவர் தனது கட்சி தொண்டர்களுடன் நேற்று போரிவிலி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் போரிவிலி ரெயில் நிலையம் அருகே வந்தபோது அங்கு பிரசாரத்துக்காக திரண்டு இருந்த பா.ஜனதா தொண்டர்கள் ‘மோடி, மோடி’ என கோஷம் போட்டனர்.

இதனால் நடிகை ஊர்மிளா மடோங்கர் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜனதாவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுக்கிதார் சோர்(காவலாளி திருடன்) என கோஷம் போட்டனர்.

உடனே ஆத்திரம் அடைந்த பா.ஜனதா தொண்டர்கள் சிலர், காங்கிரசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து ஊர்மிளா மடோங்கர், போரிவிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் தங்களது பிரசார ஊர்வலத்தில் புகுந்து ரகளை செய்ததாகவும், இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்றும் தெரிவித்தார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்