ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது: பிரதமர் மோடி

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2019-04-13 03:42 GMT
புதுடெல்லி,

1919–ம் ஆண்டு ஏப்ரல் 13–ந்தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பலர் கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டம்தான் அது. 

பிரிகேடியர் ஜெனரல் ரொனால்டு டயர் என்ற வெள்ளைக் காரர் தலைமையில் வந்த ஆங்கிலேய ராணுவ படை, கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுக்காமல், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினர். 10 நிமிட நேரம் 1,650 ரவுண்டுகள் சுட்டப்பிறகுதான் பீரங்கிகள் ஓய்ந்தன. ‘‘சுட்டேன் சுட்டேன் குண்டுகள் தீரும்வரை சுட்டேன்’’ என்று கொக்கரித்தான் பிரிகேடியர் ஜெனரல் டயர். இந்த சம்பவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர்இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 

இந்த சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த சம்பவத்தின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி  பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது.  நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்