நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம்: ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் - பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம்: ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் - பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கிறது.
பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை
இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது.
அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை ‘உறுதிகொண்ட இந்தியா, அதிகாரம் படைத்த இந்தியா’ என்ற தலைப்பில் 45 பக்கங்களை கொண்டதாக இருந்தது.
தேர்தல் அறிக்கையின் முன்பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, “நமது குடிமக்கள் கண்ணியத்துடனும், வளத்துடனும், பாதுகாப்புடனும், நல்வாய்ப்புடனும் வாழும் வகையில் வலிமையான இந்தியாவை கட்டமைக்கும் பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்வோம்” என்று எழுதி உள்ளார்.
வாக்குறுதிகள்
தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் என்று பல தரப்பினருக்கும் பாரதீய ஜனதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருக்கிறது.
பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகிலேயே 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். 2025-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார நிலையையும், 2032-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார நிலையையும் இந்தியா அடைவதை இது குறிக்கிறது.
* 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
* 60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு தனியாக ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக ‘ராஷ்டிரீய வியாபார் ஆயோக்’ என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
* விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை 5 ஆண்டுகளுக்கு குறுகியகால வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* விவசாய விளைபொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக வேளாண் துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
* அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். (2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முன்பு மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.)
* குடிநீர் மற்றும் பாசன வசதியை கருத்தில் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓடும் நதிகளை இணைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும்.
அனைவருக்கும் வீடு
* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.
* அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக்கல்லூரிகள் மற்றும் முதுநிலை பட்ட கல்லூரிகள் தொடங்கப்படும்.
* ஜி.எஸ்.டி.யை எளிமைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும்.
* நமது ஆயுதப்படைகளை வலுவாக்கும் வகையில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விரைவுபடுத்தப்படும்.
* பயங்கரவாதத்துடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை என்ற கொள்கை தொடரும்.
* பயங்கரவாதிகள் பிரச்சினையை கையாள்வதில் பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும்.
* வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்
* காவல்துறை நவீனமாக்கப்படும்.
அயோத்தி ராமர் கோவில்
* சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில், அதாவது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இலக்கு.
* 2022-ம் ஆண்டுக்குள் 75 புதிய திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவதை இலக் காக கொண்டுள்ளோம்.
* தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதா நிறைவேற்றப்படும்.
* ராமர் கோவில் பிரச்சினையில் பாரதீய ஜனதாவின் நிலையை மீண்டும் உறுதிப் படுத்துகிறோம். அரசியல் சாசன வரம்புக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவிலை விரைவில் கட்டி முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
* சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்படும்.
* காஷ்மீரில் வாழும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், பெண்களுக்கும் பாகுபாடு ஏற்படுத்தக்கூடிய 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வோம்.
பெண்கள் மேம்பாடு
* பெண்கள் மேம்பாட்டுக்கும், பாலின சமத்துவத்துக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* பெண்களுக்கு 1 ரூபாய்க்கு ‘சானிடரி நேப்கின்’ வழங்கப்படும்.
* முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்யும் சட்டமசோதா நிறைவேற்றப்படும்.
* மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டு பயிற்சி, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக ஒரு அர்ப்பணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டதிருத்தம் மூலம் கொண்டு வரப்படும்.
* பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
* அரசுக்கு தேவையான தளவாட பொருட்களில் 10 சதவீதம் குறைந்தபட்சம் 50 சதவீதம் பெண்கள் பணிபுரியும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
ரூ.20 ஆயிரம் கோடி
* அடுத்த 5 ஆண்டுகளில் வேலை பார்க்கும் பெண்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஊக்கப்படுத்தப்படும்.
* 5 ஆண்டுகளில் புதிதாக 60 ஆயிரம் கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்
* 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும். அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும்.
* இந்தியாவில் தற்போது 101 விமானநிலையங்கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் விமானநிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
* அமைப்புசாரா தொழில்களில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளை பராமரிக்க அமைப்புகள் உருவாக்கப்படும்.
* புதிய உத்தியுடன் நிறுவனங்கள் தொடங்குவதற்கு (ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்) ஊக்கம் அளிப்பதோடு, இதற்காக ரூ.20 ஆயிரம் கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.