நாட்டின் நலனுக்காக ஆட்சி மற்றும் அரசியலில் இருந்து மோடி தூக்கி எறியப்பட வேண்டும்; மம்தா பானர்ஜி ஆவேசம்
நாட்டின் நலனுக்காக பிரதமர் மோடி ஆட்சி மற்றும் அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என மம்தா பானர்ஜி ஆவேசமுடன் கூறியுள்ளார்.
நகரகாட்டா,
2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தேர்தல் பிரசார பேரணியில் இன்று பேசும்பொழுது, தேர்தல் வரும்பொழுது, ஒவ்வொருவரையும் பிரதமர் மோடி மிரட்டி வருகிறார். பொய்களை உளறி வருகிறார். பொய்களை கூறுவதற்கான போட்டி நடத்தினால் அதில் அவர் முதல் பரிசு பெற்று விடுவார் என கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் அவரது வாயில் மக்கள் பிளாஸ்திரி ஒட்ட வேண்டும். அப்படி செய்து விட்டால் அவரால் பொய்களை கூற முடியாது. நாட்டின் நலனுக்காக ஆட்சி மற்றும் அரசியலில் இருந்து பிரதமர் மோடி தூக்கி எறியப்பட வேண்டும் என ஆவேசமுடன் கூறினார்.
கடந்த 5 வருடங்களில் அவர் 4.5 வருடங்கள் உலகை சுற்றி வந்துள்ளார். நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்தபொழுது அவர் என்ன செய்தார்? பணமதிப்பிழப்பின்பொழுது மக்கள் உயிரிழந்தபொழுதும் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்தபொழுதும் அவர் என்ன செய்தார்? என கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களை கவனிக்க அவருக்கு நேரமில்லாமல் போய் விட்டது என அவர் கூறியுள்ளார்.