50 சதவீத ஒப்புகைச்சீட்டுகளை எண்ணுவதால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாள் ஆனாலும் பிரச்சினை இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் பதில்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் 50 சதவீத ஒப்புகைச்சீட்டுகளை எண்ணுவதால் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு 6 நாட்கள் ஆனாலும் பிரச்சினை இல்லை என எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளன.

Update: 2019-04-07 21:38 GMT
புதுடெல்லி,

நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சில மாநில சட்டசபை தேர்தல்களில், வாக்காளர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்புகைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேர்தலுக்குப்பின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில், தலா ஒரு வாக்குச்சாவடியில் மட்டுமே ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளிலும் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டுகளில் 50 சதவீதத்தையாவது எண்ண வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் கூறி இருந்தனர்.

இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் எதிர்க்கட்சிகள் கூறுவது போல 50 சதவீத ஒப்புகைச்சீட்டுகளை எண்ணினால் தேர்தல் முடிவு வெளியிட 5.2 நாள் (சுமார் 6 நாள்) வரை ஆகும் என தெரிவித்து இருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 50 சதவீத ஒப்புகைச்சீட்டுகளை எண்ணுவதால் தேர்தல் நடவடிக்கைகளின் கண்ணியம் உறுதி செய்யப்படுமானால் 5.2 நாட்கள் தாமதம் பிரச்சினை இல்லை என கூறப்பட்டு இருந்தது. எனினும் தேர்தல் கமிஷன் தற்போது பயன்படுத்தும் ஊழியர்களில் மேலும் ஒருவரை கூடுதலாக நியமித்தாலே இந்த தாமதத்தை கணிசமாக குறைக்க முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

ஒப்புகைச்சீட்டுகளை எண்ணாமல் தேர்தல் நடத்துவதால், ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையால் எந்த பயனும் இல்லை எனவும், அது வெறும் அலங்கார பொருளாகவே இருக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.

மேலும் செய்திகள்