போலி பாஸ்போர்ட் வழக்கில் தம்பதி உள்பட 6 பேர் கைது

போலி பாஸ்போர்ட் வழக்கில் தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-07 20:42 GMT
புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த ரவீந்தர் சிங், அவருடைய மனைவி சுனிதா குமாரி ஆகியோர் மார்ச் 1-ந் தேதி கனடா செல்ல டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது அவர்களின் பாஸ்போர்ட்டில் அடிக்கடி கனடா சென்று வந்ததற்கான முத்திரை இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சரிபார்த்த போது அது போலி பாஸ்போர்ட் என்பதும், அவர்கள் இதுவரை கனடா சென்று வந்ததற்கான எந்த பதிவேடும் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தம்பதி இருவரும் கனடாவில் குடியேற திட்டமிட்டு தங்கள் நண்பர் மூலமாக தொழில் அதிபர் விக்கியை சந்தித்தனர். தம்பதியிடம் ரூ.6 லட்சம் பெற்றுக்கொண்ட விக்கி, அவர்களை பாஸ்போர்ட் முகவர் சச்சின் குமாரிடம் அனுப்பினார். அவர் போலி பாஸ்போர்ட், போலி குடியுரிமை முத்திரையை தயாரித்து கொடுத்து உள்ளார். இந்த சங்கிலி தொடர் மோசடியில் ஆங்கில மொழி பயிற்சியாளர் சவுரவ், மற்றொரு முகவர் முகேஷ் கோயல் ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தம்பதி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62 போலி பாஸ்போர்ட்டுகள், 28 போலி குடியுரிமை முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்