மிஷன் சக்தி; 45 நாட்களில் செயற்கைக்கோள் கழிவுகள் அனைத்தும் மக்க செய்யப்படும்: டி.ஆர்.டி.ஓ. தலைவர்

மிஷன் சக்தியின் செயற்கைக்கோள் கழிவுகள் அனைத்தும் இன்னும் 45 நாட்களில் மக்க செய்யப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் கூறியுள்ளார்.

Update: 2019-04-06 12:19 GMT
புதுடெல்லி,

விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது.  இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது.

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்தனர் என டி.ஆர்.டி.ஓ.வின் தலைவர் கூறியுள்ளார்.

இதுபற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்வெளி கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. 

புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள்.  ஆனால் பா.ஜ.க. அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம்.  தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் நடந்த மிஷன் சக்தி பற்றிய ஊடக சந்திப்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி பேசினார்.  அவர் கூறும்பொழுது, ராணுவ பிரிவில் விண்வெளி முக்கியத்துவம் பெற்றுள்ளது.  இந்தியா போன்ற ஒரு நாடு இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு, இலக்கை தாக்கி அளிப்பதில் திறமையினை வெளிப்படுத்தி உள்ளது.  பாதுகாப்பதில் சிறந்த வழி என்பது தாக்குதலுக்கு முன்பே தடுப்பது என்பதே ஆகும்.

ப. சிதம்பரத்தின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், செயற்கைக்கோளை வானில் அழித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை நடத்தியபின் அதனை ரகசியமுடன் வைத்திருக்க முடியாது.  உலகம் முழுவதும் பல நிலையங்களில் செயற்கைக்கோளானது கண்காணிக்கப்பட்டு வந்தது.  தேவையான அனைத்து அனுமதிகளும் வாங்கப்பட்டன என கூறியுள்ளார்.

மிஷன் சக்தியின் செயற்கைக்கோள் கழிவுகள் அனைத்தும் இன்னும் 45 நாட்களில் மக்க செய்யப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் ரெட்டி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்