ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலில் அமல்படுத்த தயாரா? மாயாவதி சவால்
ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலில் அமல்படுத்த தயாரா? என்று மாயாவதி சவால் விடுத்தார்.
ஐதராபாத்,
நாடாளுமன்ற, ஆந்திர மாநில சட்டசபை தேர்தல்களையொட்டி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணிக்காக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று ஐதராபாத், திருப்பதி ஆகிய நகரங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டார். ஐதராபாத் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டு மக்களுக்கு நல்ல நாட்கள் வரும், ஆளுக்கு ரூ.15 லட்சம் வங்கிக்கணக்கில் போடுவோம் என்ற வாக்குறுதிகளை சொல்லி, நரேந்திர மோடி பதவிக்கு வந்தார். 5 ஆண்டு ஆட்சி முடியப் போகிறது. ஆனால், யாருக்காவது ரூ.15 லட்சம் வந்துள்ளதா? அவர்களின் வாக்குறுதிகளுக்கு கணக்கு கேட்க வேண்டும்.
மோடி ஆட்சி, அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டவர்கள், வணிகர்கள், வேலையில்லாத பட்டதாரிகள், விவசாயிகள் மட்டுமின்றி உயர் சாதி ஏழைகள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியின்றி இருக்கிறார்கள்.
எப்படி அமல்படுத்துவர்?
அதுபோல், காங்கிரஸ் கட்சியும் தனது முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இப்போது, ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. முதலில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதை அமல்படுத்த தயாரா? அங்கேயே அமல்படுத்த முடியாதபோது, எப்படி நாடு முழுவதும் அமல்படுத்துவார்கள்? எனவே, காங்கிரஸ், பா.ஜனதாவின் தவறான வழிநடத்தலில் மயங்கி, அவர்களின் வலையில் விழுந்துவிடக்கூடாது.
உத்தரபிரதேசத்தில் எனது தலைமையில் ஆட்சி நடந்தபோது, நல்லாட்சி கொடுத்தோம். இந்த தேர்தலில், உத்தரபிரதேசத்தில் எங்கள் கூட்டணிக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். இந்த கூட்டணி அமைந்த பிறகு, பா.ஜனதாவின் நிலைமை மோசமாக உள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், உத்தரபிரதேசத்தில் நலத்திட்டங்களை நிறைவேற்றிய பாணியில், நாடு முழுவதற்கும் அமல்படுத்துவேன்.
இவ்வாறு மாயாவதி பேசினார்.
பவன் கல்யாண் வேண்டுகோள்
இந்த கூட்டத்தில் பேசிய ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், ஆந்திர அரசியலில் தலையிடாமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாயாவதி பேசியதாவது:-
தேநீர் வியாபாரி வேடம் போட்ட மோடி, தற்போது காவலாளி என்ற புதிய நாடகம் போடுகிறார். அதை மக்கள் நிராகரிப்பார்கள். நலிந்த பிரிவினரின் பிரச்சினைகளை பா.ஜனதாவும், காங்கிரசும் தீர்க்க தவறி விட்டன. 70 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, சமூக நீதியை உறுதி செய்யவில்லை. அதனால், பல மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சியை பறிகொடுத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
தேவஸ்தானத்துக்கு பதிலாக புதிய குழு
இந்த கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “நாங்கள் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு பதிலாக ஆந்திர முதல்-மந்திரி தலைமையில் ஒரு சிறப்பு ஆட்சி மன்றக்குழுவை நியமிப்போம்” என்று கூறினார்.