ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவின் செயலாளரா?

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவின் செயலாளர் அகமது படேல் பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக இடைத்தரகர், டெல்லி கோர்ட்டில் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-05 23:30 GMT
புதுடெல்லி,

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்டிடம் ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தம் கிடைப்பதற்காக அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு ஹெலிகாப்டர் நிறுவனத்தால் பெருமளவு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

வழக்குகள்

இது தொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கையும், மத்திய அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஒரு வழக்கையும் தாக்கல் செய்துள்ளன.

இந்த ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் பேரத்தில் தொடர்புடைய இடைத்தரகர்கள் கிறிஸ்டியன் மிச்செல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துணை குற்றப்பத்திரிகை

இந்த வழக்கில் 2016-ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் குற்றப்பத்திரிகையை மத்திய அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் மிச்செலும் அவரது கூட்டாளிகளும் அகஸ்டாவெஸ்ட்லேண்டிடம் இருந்து லஞ்சமாக 30 மில்லியன் யூரோ (சுமார் ரூ.225 கோடி) பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதே வழக்கில் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட துணை குற்றப்பத்திரிகையை டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

அகமது படேல் பெயர்

இந்த குற்றப்பத்திரிகையில், ஏ.பி. என்ற எழுத்துகள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் எம்.பி.யைக் குறிக்கிறது என கிறிஸ்டியன் மிச்செல் அடையாளம் காட்டி உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜீவ் சக்சேனாவும், ஏ.பி. என்பது அகமது படேல் என கூறி இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அகமது படேல் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் பெயரை மிச்செல் கூறி இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துணை குற்றப்பத்திரிகையை இன்று (6-ந் தேதி) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அரவிந்த் குமார் அறிவித்துள்ளார்.

பரபரப்பு தகவல்

இந்த நிலையில் இடைத்தரகர் மிச்செல் தரப்பில் டெல்லி தனிக்கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த மனுவில் மிச்செல், “இந்த வழக்கில் அமலாக்கத்துறையிடம் நான் யாருடைய பெயரையும் ஒருபோதும் குறிப்பிடவில்லை. எனக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்படுவதற்கு முன்பாகவே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோர்ட்டின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே குற்றப்பத்திரிகை நகல் எப்படி ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்