பெண் குழந்தைகளுக்கான உங்களுடைய திட்டம் ‘பிளாப்’ மோடியை சாடிய மம்தா பானர்ஜி
பெண் குழந்தைகளுக்காக உங்களுடைய திட்டம் தோல்வியைத்தான் தழுவியது என மம்தா பானர்ஜி, மோடிக்கு பதிலடியை கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடியை பொது விவாதத்திற்கு தயாரா என சவால் விடுக்கும் மம்தா பானர்ஜி, பிரசாரத்தில் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜிதான் ‘ஸ்பீடு பிரேக்கர்’ என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள மம்தா பானர்ஜி, மாநில அரசு மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். இதற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிதி வரவில்லை என குற்றம் சாட்டி மாநில அரசே அதனை செயல்படுத்துகிறது என்றார்.
பிரதமர் மோடியின் முக்கிய திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிப்போம் திட்டம் குறித்து பேசிய மம்தா பானர்ஜி, இத்திட்டத்தால் எந்தஒரு பெண் குழந்தைக்கும் உதவி கிடையாது; மத்திய அரசின் திட்டம் தோல்வியைதான் தழுவியுள்ளது என குறிப்பிட்டார். ஆனால் என்னுடைய அரசு கொண்டுவந்த கன்யாஸ்ரீ ஐ.நா.வின் விருதையும் வாங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்காள அரசின் கன்யாஸ்ரீ திட்டம் குழந்தை திருமணத்தை தடுக்கவும், அவர்களுடைய கல்வியை உறுதி செய்யவும் அமல்படுத்தப்பட்ட திட்டமாகும்.