சிபிஎம்முக்கு எதிராக பேச மாட்டேன் : ராகுல் காந்தி சொல்கிறார்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் பேச மாட்டேன் என வேட்புமனு தாக்கலுக்கு பின் ராகுல் காந்தி கூறினார்.
திருவனந்தபுரம்:
இந்தியாவின் 543 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றாக இருந்த கேரளாவின் வயநாடு தொகுதி இன்று சர்வதேச ஊடகங்களும் உற்றுப்பார்க்கும் தொகுதியாக மாறிப்போனது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்புக்கு பின் அந்த தொகுதி எங்கிருக்கிறது?, வாக்காளர்கள் விபரம் உள்ளிட்ட தகவல்களை இணையதளங்களில் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் முகாமிடும் தொகுதியாக வயநாடு மாறிப்போனது. ஒரு வாரத்திற்குள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறிய வயநாட்டில் இன்று ராகுல்காந்தி மனு தாக்கல் செய்தார்.
வயநாட்டில் மனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி நேற்று இரவே கேரளா வந்தார். கோழிக்கோட்டில் தங்கிய அவர் இன்று பகல் 11.30 மணிக்கு மனு தாக்கல் செய்ய வயநாடு கலெக்டர் அலுவலகம் சென்றார்.
வயநாடு வந்த ராகுல்காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தார். இவர்கள் இருவரையும் காண இன்று காலை முதலே வயநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்சி பாகுபாடின்றி ஏராளமான மக்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டனர்.
கேரளா மட்டுமின்றி வயநாடு தொகுதியையொட்டியுள்ள தமிழகத்தின் நீலகிரி, கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் தொகுதிகளில் இருந்து காங்கிரசார் வயநாட்டில் குவிந்தனர். இதுபோல கேரளாவின் அண்டை மாவட்டங்களில் இருந்தும் அணி அணியாய் காங்கிரசார் வயநாட்டில் திரண்டனர். பகல் 11 மணிக்கு வயநாட்டின் அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கொடிகளும், அவற்றை ஏந்திச்சென்ற தொண்டர்களும் காணப்பட்டனர்.
லட்சக்கணக்கில் குவிந்த மக்களால் வயநாடு குலுங்கியது. இதனால் நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அப்பகுதியில் அலை மோதிய கூட்டத்தில், தடுப்பு ஒன்று திடீரென விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ராகுல் காந்தியின் வருகையை பதிவு செய்ய வந்திருந்த 3 செய்தியாளர்கள் படுகாயமுற்றனர். அவர்களை ராகுல் காந்தி, ஆம்புலன்ஸில் ஏற்றினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின் வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த கே.வி.தங்கபாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேட்பு மனு தாக்கலுக்குப்பின் ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது;-
இந்தியா என்பது ஒன்றே வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என்று இல்லை . சிபிஎம்மின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இப்போது எனக்கு எதிராக பேசி என்னை தாக்குவதை புரிந்து கொள்கிறேன். ஆனால் நாம் சிபிஎம்முக்கு எதிராக பிரச்சாரத்தில் ஒருவார்த்தை கூட பேசப்போவது இல்லை.
தென்னிந்தியாவும் ஒரு மையமாக உள்ளது. மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ், கலாச்சாரம் மற்றும் தென் மொழிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்று செயல்படுகிறார்கள் என கூறினார்.