வயநாடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்

வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2019-04-04 06:22 GMT
வயநாடு,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, இன்று காலை 11.41 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக,  கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா நகருக்கு வந்த ராகுல் காந்தி,  அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காவுடன் வாகன பேரணி ஒன்றையும் ராகுல் காந்தி  நடத்தினார். வேட்டி சட்டையுடன் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். ராகுல் காந்தியின் வாகன பேரணி மற்றும் வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளில் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, பொதுச்செயலாளர்கள் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநில கட்சித்தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். 

ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டு கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. அவரை பார்ப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வயநாட்டில் குவிந்தனர்.   ராகுல், பிரியங்கா ஆகியோர் வருகையை முன்னிட்டு வயநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், பாரத் தர்ம ஜனசேனா தலைவருமான துஷார் வெல்லப்பள்ளி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகள்