ஹெலிகாப்டர் ஊழலில் ‘ஆர்.ஜி.’ என்பவர் யார்? கண்டறிய முயற்சிப்பதாக கோர்ட்டில் தகவல்

ஹெலிகாப்டர் ஊழலில் ‘ஆர்.ஜி.’ என்பவர் யார் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது என கோர்ட்டில் கூறப்பட்டது.

Update: 2019-04-03 21:15 GMT
புதுடெல்லி,

மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிநவீன அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் தரகர்கள் சிலர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் கூறும்போது, “இந்த வழக்கில் கைதான தரகர் சூசன் மோகன் குப்தா டைரியில் ஆர்.ஜி. என பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.ஜி. யிடம் இருந்து ரூ.50 கோடிக்கு மேல் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த ஆர்.ஜி. என்பவர் ராஜத் குப்தா என சூசன் மோகன் குப்தா கூறுகிறார். இதில் அவர், விசாரணையை தவறாக வழிநடத்துகிறார் என கருதுகிறோம். ஏனென்றால், இந்த தகவலை ராஜத் குப்தா மறுத்துள்ளார். எனவே ஆர்.ஜி. என்பவர் யார் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது” என கூறப்பட்டது.

மேலும், “இந்த ஊழல் தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்தின் (காங்கிரஸ்) நெருங்கிய உறவினர் ராதுல் புரியிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்