‘உண்மையான முகம் நினைவில் உள்ளதா?’ - பிரதமர் மோடிக்கு கண்ணாடி அனுப்பிய சத்தீஷ்கார் முதல்-மந்திரி

பிரதமர் மோடிக்கு கண்ணாடி அனுப்பிய சத்தீஷ்கார் முதல்-மந்திரி, உண்மையான முகம் நினைவில் உள்ளதா என கிண்டலாக கடிதமும் எழுதினார்.

Update: 2019-04-01 22:00 GMT
ராய்ப்பூர்,

காங்கிரஸ் தலைவரும், சத்தீஷ்கார் முதல்-மந்திரியுமான பூபேஷ் பாகேல், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உங்களுக்கு (மோடி) ஒரு கண்ணாடியை பரிசாக அனுப்பி உள்ளேன். அதை உங்கள் வீட்டில் மாட்டி வையுங்கள். அதை எப்போதெல்லாம் கடந்து செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் முகத்தை பாருங்கள். அந்த நேரத்தில் உங்கள் உண்மையான முகத்தை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் அந்த கண்ணாடியை பயன்படுத்தாமல் போகலாம். அதை உங்கள் வீட்டின் அருகே உள்ள குப்பை தொட்டியில் கூட வீசலாம். அப்படி செய்தாலும் உங்களின் உண்மையான முகத்தை நீங்கள் மறைக்க முடியாது. ஏனெனில் நாட்டில் உள்ள 125 கோடி மக்கள் தேர்தலில் உங்களின் உண்மை முகத்தை உங்களுக்கே காட்டுவார்கள்.

உங்களை மோடி என்று அழைக்கலாமா?. ஏனெனில் நீங்கள் அவ்வப்போது டீக்கடைக்காரர், தலைமை சேவகன், காவலாளி என பல்வேறு பெயர்களில் உங்களை அழைத்துக்கொள்வதால் மக்கள் குழப்பம் அடைகின்றனர். மக்களின் ஓட்டுகளை கவர பல்வேறு முகங்களை காட்டிய முதல் இந்திய பிரதமர் நீங்கள் தான். உங்களின் உண்மையான முகம் உங்களுக்காவது நினைவில் உள்ளதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்