காங்கிரஸ் கட்சியில் சேருவது ஏன்? - சத்ருகன் சின்ஹா விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் சேருவது ஏன்? என்பதற்கு சத்ருகன் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-03-31 22:45 GMT
புதுடெல்லி,

பீகார் மாநிலம் பாட்னாசாகிப் தொகுதி பா.ஜனதா எம்.பி.யான நடிகர் சத்ருகன் சின்ஹா அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் வருகிற 6-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். அவர் மீண்டும் பாட்னாசாகிப் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நீண்டகாலம் பணியாற்றிவிட்டு பா.ஜனதா கட்சியில் இருந்து விலகுவது வலியை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் பிரபல தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண்சோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை கட்சி நடத்திய விதம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

வாஜ்பாய் காலத்தில் கூட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது கட்சியில் ஜனநாயகம் உண்மையான உணர்வுடன் இருந்தது. ஆனால் இப்போது ஒரு நபர் ஆட்சி, இரு நபர் படை (பிரதமர் மோடி, அமித்ஷா) தான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மிகப்பெரும் பழமையான கட்சி, மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு ஆகிய மாபெரும் தலைவர்கள் அந்த கட்சியில் இருந்தனர். அந்த கட்சி இந்தியாவின் விடுதலை இயக்கத்தில் பெரும் பங்காற்றி உள்ளது. மற்றொரு காரணம் உண்மையான உணர்வுள்ள தேசிய கட்சி.

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் அவர்களது கட்சியில் என்னை சேர்த்துக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் நான் இந்த இடத்துக்கு வந்ததற்கு காரணம், எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அதே பாட்னா சாகிப் தொகுதி எனக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியது தான்.

கடந்த தேர்தலில் நான் மோடி அலையால் வெற்றிபெறவில்லை. மோடி அழிவு தான் இருந்தது. குறிப்பாக ஷாநவாஸ் உசேன் பாகல்பூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். அருண் ஜெட்லி அவமானகரமான தோல்வியை சந்தித்தார். எனது நண்பர், வழிகாட்டி, தத்துவவாதியான எல்.கே.அத்வானி, ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங் போன்ற பா.ஜனதா தலைவர்களை கூட பிரசாரத்துக்கு அழைக்கவில்லை.

இவ்வளவு ஏன், எனது சொந்த மகள் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவை கூட அழைக்கவில்லை. எனவே பா.ஜனதா கட்சி தயவால் தான் நான் வெற்றிபெற்றேன் என்று அவர்கள் சொல்லக்கூடாது. நான் எனது சொந்த முயற்சியால், கொள்கையால் யாருடைய உதவியும், ஆதரவும் இன்றி வெற்றிபெற்றேன். பா.ஜனதா எனக்கு உதவி செய்யவில்லை, மற்ற வேட்பாளர்களுக்கு உதவி செய்தார்கள்.

மோடி அலையோ அல்லது அழிவோ நாட்டில் எது இருந்தாலும், எனது வெற்றியில் பாட்னா மக்களின் பங்களிப்பு தான் உள்ளது. நாட்டிலேயே அதிக ஓட்டு சதவீதம் எனக்கு கிடைத்தது.

இப்போது என்னை எதிர்த்து போட்டியிடும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எனது குடும்ப நண்பர் போன்றவர், அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவர் தனிப்பட்ட விமர்சனங்கள் செய்யாமல், பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசுவார் என நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

யார் வெற்றிபெறுவது என்பதை பாட்னா மக்கள் தான் முடிவு செய்வார்கள். அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். கடவுளின் ஆசியாலும், மக்களின் அமோக ஆதரவாலும் எனது முந்தைய சாதனைகளை முறியடிப்பேன் என நான் உணர்கிறேன்.

ராகுல் காந்தி பிரச்சினைகளை தைரியமாக கையாள்கிறார். அவர் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்ற ஒரு வருடத்தில் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தன்னை நிரூபித்து இருக்கிறார். மிகவும் பிரபலமான வாசகமான ‘காவலாளியே திருடன்’ என்பதை உருவாக்கியவரும் அவர் தான்.

ராகுல் காந்திக்கு அடுத்த பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. மக்களின் ஆசியோடு காங்கிரஸ் பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் இது சாத்தியமாகும்.

பா.ஜனதா என் மீது நடவடிக்கை எடுப்பதாக நீண்டகாலமாக மிரட்டி வருகிறது. அந்த நடவடிக்கைக்கு பதிலடி தருவதற்கு சரியான நேரம் இதுதான். இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.

மேலும் செய்திகள்