ராகுல் காந்தி பேரணி; நாற்காலிகளை வீசி, தடுப்பு வேலிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்
ராகுல் காந்தி பேரணி நடைபெறும் இடத்தில் நாற்காலிகளை வீசி, தடுப்பு வேலிகளை உடைத்து கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தின் மால்டா நகரில் சஞ்சால் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேரணி ஒன்றில் கலந்து கொண்டு இன்று பேச திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அருகிலுள்ள நகரங்களில் இருந்து பேரணி நடைபெறும் இடத்திற்கு தொண்டர்கள் வந்து குவிந்தனர்.
பேரணி நடைபெறும் பகுதியில், அமருவதற்கு ஏற்ற வகையில் முறையான வசதிகளை செய்திடாத கட்சியின் மாநில தலைமைக்கு எதிராக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பேரணி நடைபெறும் மைதானத்தின் உள் வளையத்திற்குள் புகுந்து செல்ல முயன்றனர்.
இதனால் அங்கிருந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் போலீசார் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களின் வேண்டுகோளை ஏற்காத தொண்டர்கள், வி.ஐ.பி.க்கள் அமரும் பகுதியை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். இந்த பகுதி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்பின் போலீசார் மற்றும் கட்சி தலைவர்கள் பேசி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் நடந்தபொழுது ராகுல் காந்தி அங்கு இல்லை. அவர், பீகாரின் பூர்னியா பகுதியில் இருந்துள்ளார். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.