தார்வார் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கர்நாடக மாநிலம் தார்வாரில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-03-22 04:05 GMT
தார்வார்,

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டுமான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்துள்ளது.இதனால் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வந்துள்ளன.

திடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கடைகளில் பணியாற்றியவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர். சம்பவம் நடந்த முதல் நாளில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60-க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். முதல் நாளில் 2 பேர் பிணமாக மீட்கப் பட்டனர்.

அதோடு இரவு பகலாக மீட்பு பணிகள் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் 2-வது நாள் மீட்பு பணியின்போது 5 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. நேற்று 3-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. நேற்று மேலும் 6 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து கட்டிடம் இடிந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. 4-வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

மீட்பு பணிகளை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட துணை ஆணையர் தீபா சோலன் கூறுகையில், “ மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, இரண்டு பேரை மீட்டோம். இன்னும் 3 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தேசிய பேரிடம் மீட்பு படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்” என்றார். 

மேலும் செய்திகள்