பிரதமர் மோடி கடந்த வருடத்தில் 1 கோடி வேலைகளை அழித்து விட்டார்; ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி கடந்த வருடத்தில் 1 கோடி வேலைகளை அழித்து விட்டார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2019-03-20 09:21 GMT
இம்பால்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரின் இம்பால் நகரில் நடந்த பேரணி ஒன்றில் இன்று கலந்து கொண்டார்.  அவர் கூட்டத்தின் முன் பேசும்பொழுது, பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவேன் என உறுதி கூறினார்.

ஆனால், நாளொன்றுக்கு 30 ஆயிரம் என்ற அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டில் 1 கோடி வேலைகளை அவர் அழித்து விட்டார்.  இதுவே அவரது திறமையின்மைக்கான ஓர் அளவீடு.  2 கோடி வேலைகளை தருவேன் என்ற பிரதமரின் வாக்குறுதி நகைப்பிற்குரியது என கூறியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது மக்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டது.

பிரதமர் எப்பொழுதெல்லாம் மணிப்பூர் வருகிறாரோ அப்பொழுது அவர் உங்களது கலாசாரம், உங்களது வரலாறை புண்படுத்தி உள்ளார்.

அவரது கட்சி தலைவர் (அமித் ஷா), குடிமக்கள் சீர்திருத்த மசோதா மணிப்பூர் மக்கள் மற்றும் வடகிழக்கு பகுதிகளின் மீது திணிக்கப்படும் என கூறுகிறார்.  இவர்கள் எல்லாம் உங்களது கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.  நாங்கள் மசோதா நிறைவேற அனுமதிக்கமாட்டோம்.  காங்கிரஸ் கட்சி உங்கள் கலாசாரத்தினை பாதுகாக்கும்.  மசோதா நிறைவேறாது என கூறியுள்ளார்.

தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவை இணைக்கும் ஒரு பாலம் ஆக வடகிழக்கு பகுதிகளை உருவாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் செய்திகள்