நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளிடையே பிரதமர் மோடி இன்று பேசுகிறார்

நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி (சவுகிதார்) என்று அழைத்து வருகிறார்

Update: 2019-03-20 00:00 GMT

புதுடெல்லி, 

ரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரை விமர்சித்து வருகிறார்.

எனவே, அவருக்கு பதிலடியாக, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை நடத்துமாறு பா.ஜனதாவினருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் காவலாளிகளிடையே (வாட்ச்மேன்) இன்று உரையாற்றுகிறார். ஆடியோ வசதியில் அவர் பேசுகிறார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ‘நானும் காவலாளிதான்’ பிரசாரத்தில் இணைந்த பொதுமக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி, 31–ந் தேதி நடக்கிறது. 500 இடங்களில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவல்களை பா.ஜனதா ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அனில் பலுனி தெரிவித்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வழக்கம்போல், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

அருணாசலபிரதேசம் இடா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:–

ரபேல் விவகாரத்தில், இந்த நாட்டின் காவலாளி அம்பலப்படுத்தப்பட்டார். நாட்டின் காவலாளியே, திருடனாக மாறும்போது நாடு எப்படி முன்னேறும்?

நீங்களே எல்லாவற்றையும் திருடும்போது, ஏன் உங்கள் கட்சி தலைவர்களையும் ‘காவலாளி’ ஆக்கினீர்கள்?

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மேலும் செய்திகள்