பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறிய மத்திய மந்திரி : காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜனதா கட்சியினர் ‘பப்பு’ என்று கேலியாக கூறுவது வழக்கம்.

Update: 2019-03-18 21:53 GMT
நொய்டா,

பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி மகேஷ் சர்மா உத்தரபிரதேச மாநிலத்தில் தனது தொகுதியில் உள்ள சிகந்தராபாத் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “தான் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்று பப்பு கூறுகிறார். மாயாவதி, அகிலேஷ் யாதவ், பப்பு.... இப்போது பப்புவின் பப்பியும் (பிரியங்கா) வந்திருக்கிறார். பிரியங்கா தேசத்தின் மகள் அல்ல, காங்கிரசின் மகள். அவர் என்ன புதிதாக கொண்டு வரப்போகிறார்? எதிர்காலத்தில் அவர் அரசியலில் நீடிக்கமாட்டார்” என்று கூறினார். அதோடு மம்தா பானர்ஜி, குமாரசாமி ஆகியோரையும் அவர் கேலி செய்தார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேற்கு உத்தரபிரதேச காங்கிரஸ் இணை பொறுப்பாளர் தீரஜ் குர்ஜார், “இதெல்லாம் அவரது எண்ணத்தில் இருப்பதால் தான் வார்த்தைகளாக வந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவர் ஒரு பெண் மீது இப்படிப்பட்ட வார்த்தையை கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது’‘ என்றார்.

மேலும் செய்திகள்