கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கோவா,
நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரிக்கர் மறைவுக்கு மத்திய அமைச்சரவை சார்பில் இன்று இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.
பாரிக்கரின் உடல் இன்று காலை பனாஜி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 9.30 மணி முதல் 10.30 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கிடையே, கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அங்கு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிக்கருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.
பாரிக்கர் மறைவுக்கு கோவா மாநில அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ல் கோவா முதல்வராக பதவியேற்ற பாரிக்கர், 2014ல் மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்ததும் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் 2016ல் இந்திய ராணுவம், எல்லைத்தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்கல் நடத்தியது. ரபேல் போர் விமான ஒப்பந்தமும், பாரிக்கரின் பதவிக் காலத்திலேயே கையெழுத்தானது. பின்னர், 2017ல் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர் கோவா முதல்-மந்திரியக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.