“என்னுடைய கடைசி மூச்சுவரையில் கோவா மக்களுக்காக பணியாற்றுவேன்” என்றவர் மனோகர் பாரிக்கர்
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் அவதிப்பட்டார். இதற்காக, வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும், கோவா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவந்தார். அவருடைய உடல் நிலை இன்று மிகவும் மோசமானதாகவும், அவருடைய உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள் எனவும் மாலை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். அவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சியினுடரும் நல்ல நட்புடன் பழகும் தன்மை கொண்ட நல்ல மனிதர் ஆவார். அவருடைய இழப்பு பா.ஜனதாவிற்கு பெரும் இழப்புதான். மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், “மனோகர் பாரிக்கர் உயிரிழப்பால் பா.ஜனதா மிகப்பெரிய இழப்பை எதிர்க்கொண்டுள்ளது. கட்சி உறுப்பினர் என்பது போக எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். என்னுடன் அவர் இப்போது இல்லை. நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். கோவா செல்கிறேன்,” என கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களும் அவருடைய இனிமையான பண்புகளை தெரிவித்து, இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்தியாவிலே ஐஐடியில் படித்த முதல் முதல்வர் என்ற பெருமையை தனதாக்கியவர்.
வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பியதும் உடல் நிலை சரியில்லாமல் முதல்வராக பணியாற்றினார். அப்போது அவரை பா.ஜனதா வலுக்கட்டாயப் படுத்தி பணியில் வைத்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் “என்னுடைய கடைசி மூச்சுவரையில் கோவா மக்களுக்காக பணியாற்றுவேன்,” என்று கூறினார். அதன்படியே இறுதி மூச்சுவரையில் கோவா மாநில மக்களுக்காகவே பணியாற்றினார். கோவா மாநிலத்தில் 4 முறை முதல்வராக இருந்துள்ளார். 2014 தேர்தலில் பா.ஜனதா மகா வெற்றியை தனதாக்கியதும் மத்திய அரசுக்கு சென்று பாதுகாப்பு அமைச்சரானார். பின்னர் 2017-ம் ஆண்டு கோவா மாநில அரசியலுக்கு திரும்பினார். அவருடைய இழப்பு தேசத்திற்கு பெரும் இழப்புதான்.