உ.பி. அரசியலில் மாற்றத்தை கொண்டுவருவது என்னுடைய பொறுப்பு - பிரியங்கா காந்தி
உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
தீவிர அரசியல் களத்தில் இறங்கி உள்ள பிரியங்கா காந்தி பிரயாக்ராஜ் மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் பிரியங்கா, கங்கை நதி யாத்திரை மேற்கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை திரிவேணி சங்கமத்தில் இருந்து நாளை தொடங்குகிறார். கங்கை நதியில் சுமார் 140 கி.மீ. தூரத்துக்கு செல்லும் அவர் நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இப்பயணத்தை முன்னிட்டு உத்தரபிரதேச மக்களுக்கு பிரியங்கா, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், உத்தரபிரதேசத்தில் உங்கள் ஆதரவுடன் அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் அனைவரும் கடும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வலிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். உங்கள் கருத்துகளை கேட்காமல், கவலைகளை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
எனவே உங்கள் வீட்டுக்கே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வருகிறேன். அவ்வாறு உங்கள் கருத்துக்களை அறிந்த பிறகு உண்மையின் அடித்தளத்தில் மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை நாம் இணைந்து கொண்டு வருவோம். உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி நாம் நகர்வோம் என கூறியுள்ளார்.