மசூத் அசார் விடுதலை செய்வதற்கு சோனியா காந்தி காரணம் - மத்திய அமைச்சர் பதில்
மசூத் அசார் விடுதலை செய்வதற்கு சோனியா காந்தி காரணம் என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின்போது கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை மீட்க பயங்கரவாதி மசூத் அசார் விடுவிக்கப்பட்டான். அவன் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை தொடங்கி இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறான். 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கும் இவனுடைய பயங்கரவாத இயக்கமே பொறுப்பு ஏற்றது.
பயங்கரவாதம் விவகாரத்தில் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மோடி விமர்சனம் செய்து வருகிறார். மசூத் அசாரை விடுதலை செய்தது யாரென்று புல்வாமா தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு பதில் அளியுங்கள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி வலியுறுத்தினார். மசூத் அசார் விடுதலை தொடர்பாக இருதரப்பும் மோதிக்கொள்ளும் நிலையில் மசூத் அசார் விடுதலை செய்வதற்கு சோனியா காந்தி காரணம் என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
ஜம்முவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், 1999-ல் விமான கடத்தலின் போது பயணிகளை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார். சோனியா காந்தியிடம்தான் முதலில் ஆலோசனையை மேற்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர்களின் ஒப்புதலின்பேரிலே மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார். எனவே அவரது விடுதலைக்கு சோனியா காந்தியும் பொறுப்பேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு வரலாற்றில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே படிக்கும் நோய் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் நேருவும், இந்திரா காந்தியும் மிகப்பெரிய தவறை செய்துள்ளனர். அதனால்தான் காஷ்மீர் பிரச்சினை இன்றளவும் நீடிக்கிறது என கூறியுள்ளார்.