40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு பதில் அளியுங்கள் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
மசூத் அசாரை விடுதலை செய்தது யாரென்று புல்வாமா தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு பதில் அளியுங்கள் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின்போது கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை மீட்க பயங்கரவாதி மசூத் அசார் விடுவிக்கப்பட்டான். அவன் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை தொடங்கி இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறான். 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கும் இவனுடைய பயங்கரவாத இயக்கமே பொறுப்பு ஏற்றது. பயங்கரவாதம் விவகாரத்தில் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் மோடி விமர்சனம் செய்து வருகிறார்.
நேற்று கோவாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 40 மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான நபரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது பா.ஜனதா தான் என்பதை ஏன் நீங்கள் பேசுவதில்லை? நாங்கள் உங்களைப்போல (மோடி) இல்லை. நாங்கள் பயங்கரவாதத்துக்கு தலைவணங்கவில்லை. மசூத் அசாரை யார் விடுவித்தது என்பதை இந்திய மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். இப்போது இதே கேள்வியை டுவிட்டரில் முன்வைத்துள்ளார்.
“பிரதமர் மோடி அவர்களே, 40 சிஆர்பிஎப் வீரர்களை கொலை செய்துள்ள பயங்கரவாதி மசூத் அசாரை விடுதலை செய்தது யார் என்பதை அவர்களுடைய குடும்பத்தாரிடம் சொல்லுங்கள். இப்போது உங்களுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல்தான் அப்போதையை டீல் மேக்கர் ஆவார், அவர்தான் கந்தகார் சென்று பாகிஸ்தானிடம் கொலையாளிகளை ஒப்படைத்தார்,” என குறிப்பிட்டுள்ளார்.