சென்னை ஐ.சி.எப். உலக அளவில் அதிக ரெயில் பெட்டிகளை தயாரித்து சாதனை
நடப்பு நிதியாண்டில் சென்னை ஐ.சி.எப். உலக அளவில் அதிக ரெயில் பெட்டிகளை தயாரித்து உள்ளது.
புதுடெல்லி,
சென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் எனும் இந்தியாவின் மிக விரைவாக செல்லும் ரெயில் தயாரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் 301 பெட்டிகள் என இங்கு நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-பிப்ரவரி) 2,919 ரெயில் பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, தொடர்ந்து இந்த நிதியாண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் பெட்டிகள் தயாரிக்கப்படும். இதனால் உலக அளவில் அதிக ரெயில் பெட்டிகளை தயாரித்த தொழிற்சாலை என்ற நிலையை எட்டும் என கூறினார்.
இந்த தொழிற்சாலையில் கடந்த ஆண்டில் 2,085 ரெயில் பெட்டிகளும், கடந்த 2017ம் ஆண்டில் 1,976 பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் மற்ற 5 தொழிற்சாலைகளை விட இங்கு அதிக அளவில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
சீனாவில் முன்னணியில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலைகள் ஆண்டொன்றுக்கு 2,600 ரெயில் பெட்டிகள் வரை தயார் செய்து வருகின்றன.