பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது -சிவசேனா
விமானப்படை தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என சிவசேனா கூறியுள்ளது.
2019 தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தானில் எத்தனை பயங்கரவாதிகளை கொன்றது என்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் களேபரமே நடக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, விமானப்படை தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த விமானப்படை தாக்குதலை பற்றிய விவாதங்கள் அனைத்தும் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் தான். சில எதிர்க்கட்சிகள் பதிலடி தாக்குதலுக்கான ஆதாரம் கேட்கின்றனர். இந்திய விமானப்படையினரால் எதிரிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டும் அல்ல லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் ஊடகங்கள் கூட பதிலடி தாக்குதலை பற்றி கேள்வி எழுப்புகின்றன. இவ்வாறு கேட்பதனால் நம் ராணுவத்தினரின் மன உறுதி குறைந்து போவதில்லை.
புல்வாமா தாக்குதலுக்கு 300 கிலோ வெடிபொருட்கள் எப்படி கொண்டு வரப்பட்டது? பதிலடி தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்? இப்படிபட்ட கேள்விகள் தேர்தல் நடக்கும் வரை விவாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.
இதன்மூலம் புல்வாமா தாக்குதலுக்கு முன்பு வரை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நாட்டின் பணவீக்கம், வேலையின்மை, ரபேல் போர் விமான பேரம் போன்ற அனைத்து முக்கிய பிரச்சினைகளும் ஓரங்கட்டப்பட்டு விட்டன. ராமர் கோவில் விவகாரம், விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராக மோடி அரசு குண்டு வீசி விட்டது என சாம்னாவில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.