என்னுடைய சிந்தனையெல்லாம் பாகிஸ்தானை பற்றிதான் உள்ளது - பிரதமர் மோடி
குஜராத் பொதுக்கூட்டத்தில் கொச்சிக்கு பதில் பிரதமர் மோடி கராச்சியை குறிப்பிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஜாம்நகர்,
ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவமனை புதிய கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். ஜாம்நகர் மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும் என்றார். பாகிஸ்தான் நகரான கராச்சியை பிரதமர் மோடி குறிப்பிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கூட்டத்திலிருந்து சத்தம் வரவும் சுதாரித்துக்கொண்ட பிரதமர்மோடி, கராச்சியை குறிப்பிடவில்லை. கேரள மாநிலம் கொச்சியை தான் குறிப்பிட்டேன் என கூறினார். விளக்கமாக பேசுகையில், என்னுடைய சிந்தனை எல்லாம் தற்போது அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது. அதனால் தான் கராச்சி என கூறிவிட்டேன். நம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நாம் திருப்பி தாக்குதல் நடத்த வேண்டுமா? வேண்டாமா?’’ என கேட்டார். அப்போது அங்கிருந்த மக்கள், ‘‘தாக்குதல் நடத்த வேண்டும்’’ என கோஷம் எழுப்பினர்.