ராணுவ வீரர்களின் தியாகம் வீணாக இந்தியா அனுமதிக்காது பிரதமர் மோடி பேச்சு
பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் தியாகம் வீணாக இந்தியா அனுமதிக்காது என்றார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் பிரதமர் மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டனர். நிதிஷ்குமார் பேசுகையில், பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் மோடியின் போராட்டத்தை பாராட்டினார். பிரதமர் மோடி பேசத் தொடங்கியதும் பாரத் மாதாக்கு ஜே கோஷம் எழுப்பப்பட்டது. அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரின் நலனுக்காக பணியாற்றுகிறது. விவசாயிகளின் கணக்குக்கு வருடத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி வழங்கப்படும் என்றார்.
எதிர்க்கட்சிகள் இந்திய விமானப்படையின் தைரியம் குறித்து சந்தேகம் எழுப்புகின்றன என சாடிய பிரதமர் மோடி, மத்தியில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தேசம் வளர்ச்சியடையாது, மாறாக ஆட்சிக்கு வருபவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்வார்கள். இப்போது இந்திய விமானப்படையின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் நம்முடைய படையை ஏன் ஊக்கமிழக்க செய்ய வேண்டும்? நம்முடைய எதிரிகள் பலன் அடையும் வகையில் அவர்கள் அறிக்கையை ஏன் வெளியிட வேண்டும்?
இந்தியா துணிச்சலான வீரர்களின் தியாகத்தை வீணாக அனுமதிக்காது. ஒவ்வொரு தியாகத்திற்கும் ஒரு பொருத்தமான பதில் கொடுப்போம் என்பதை உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.