நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்தியா வளமாவதற்கான நடைமுறைகள் பற்றிய ‘டிரெய்லர்’ தான் பட்ஜெட் - பிரதமர் மோடி கருத்து

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை வளமாக்குவதற்கான நடைமுறைகள் பற்றிய ‘டிரெய்லர்’ தான் இந்த பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Update: 2019-02-01 23:45 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

பட்ஜெட் அறிவிப்புகளும், திட்டங்களும் மக்களை வலுவடையச் செய்யும். 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், 3 கோடி நடுத்தர குடும்பங்கள், 30 முதல் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த பட்ஜெட்டால் பலன் அடைவார்கள். அரசின் முயற்சியால் நாட்டின் வறுமை விகிதம் சரியும்.

இந்த பட்ஜெட் 130 கோடி மக்களின் புதிய இந்தியாவுக்கான இலக்கை உணர்வதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தும். விவசாயிகள் முதல் நடுத்தர மக்கள் நலன் வரை, வருமான வரி விலக்கு முதல் கட்டமைப்பு வரை, உற்பத்தி முதல் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வரை, வீட்டுவசதி முதல் சுகாதார வசதி வரை புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கான அரசின் முயற்சிகள் இந்த பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது.

வறுமையின் பிடியில் கட்டப்பட்டுள்ள மக்கள் பலர் அதில் இருந்து விடுபட்டுள்ளதும், நடுத்தர மக்கள் வரியில் இருந்து விலக்கு பெற்றதும் மகிழ்ச்சி அளிக்கிறது. நடுத்தர மக்களின் கனவுகள் நனவாவதன் மூலம் அவர்கள் வளர்ச்சி அடைவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை வளமாக்குவதற்கான நடைமுறைகள் பற்றிய ‘டிரெய்லர்’ தான் இந்த பட்ஜெட்.

பல வருடங்களாக விவசாய சமுதாயத்துக்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதிகமான விவசாயிகள் அந்த திட்டங்களின்கீழ் வரவில்லை. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி விவசாய நிதி திட்டம் 5 ஏக்கர் நிலத்துக்கு கீழ் வைத்துள்ள விவசாயிகள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு வரலாற்று நடவடிக்கை.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமும் தொழிலாளர்களை பாதுகாக்க உதவும் முக்கிய நடவடிக்கை. இந்த மேம்பாட்டுக்கான பலன்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் சென்றடைய வேண்டியது மிகவும் முக்கியமானது. இந்த பட்ஜெட் ஏழைகளை வலுவடையச் செய்யும், விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்.

இந்த பட்ஜெட்டை அளித்ததற்காக சிகிச்சையில் இருக்கும் அருண் ஜெட்லி மற்றும் நிதி மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்