‘ஓட்டுக்காக போடப்பட்ட பட்ஜெட்’ - ப.சிதம்பரம் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட் செலவுகளுக்காக போடப்பட்டது அல்ல, ஓட்டுக்காக போடப்பட்ட பட்ஜெட் என்று ப.சிதம்பரம் கூறினார்.

Update: 2019-02-01 22:00 GMT
புதுடெல்லி,

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

இது இடைக்கால பட்ஜெட் அல்ல. இது தேர்தல் பிரசார பேச்சுடன் கூடிய ஒரு முழுமையான பட்ஜெட். இதனை செய்ததன் மூலம் மத்திய அரசு மரபுகளை காலில் போட்டு மிதித்துள்ளது.

இது அரசியல் சட்டத்தை மீறுவதாகும். நாட்டின் வளங்களில் ஏழைகளுக்கே முதல் உரிமை என்ற காங்கிரசின் முடிவை மத்திய அரசு காப்பியடித்துள்ளது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் ‘இது செலவினங்களுக்காக போடப்பட்ட பட்ஜெட் அல்ல; ஓட்டுகளுக்காக போடப்பட்ட பட்ஜெட்’.

நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக உள்ளது வருத்தத்திற்குரியது. முந்தைய ஆண்டில் இது 1.9 சதவீதமாக இருந்தது. சிறிய, நடுத்தர விவசாயிகளுக்கு வருமானம் தரும் திட்டம் ஒரு நம்பிக்கையற்ற நடவடிக்கை. நிதி ஒழுங்கு முரட்டுத்தனமாக மீறப்பட்டுள்ளது. இதற்காக கடன் வாங்கிய பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டும் இந்த திட்டத்துக்கு முழுவதும் கடன் வாங்கிய தொகையில் இருந்து ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட வேண்டும். நான் விவசாயிகளுக்கான உதவியை வரவேற்றால், விவசாயிகள் அல்லாத ஏழைகளின் நிலை என்ன?, நகரங்களில் உள்ள ஏழைகளின் நிலை என்ன? இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

மேலும் செய்திகள்