3-வது நாளை எட்டிய அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம்
3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் இருந்து வரும் அன்னா ஹசாரேவின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை,
மராட்டியத்தை சேர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொடர் போராட்டம் காரணமாக முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அது சட்டமாகியது.
இந்த சட்டத்தின்படி மத்திய அரசு பணியாளர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் அமைப்பும், மாநில அரசு பணியாளர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க அந்தந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.
மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் ஏற்கனவே லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அந்த அமைப்பு வலுவிழந்து இருப்பதால், புதிய சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா அமைப்பை கொண்டு வர வேண்டும் என்றும் அன்னா ஹசாரே (வயது 81)குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மத்தியில் லோக்பாலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தாவையும் வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக சமீபத்தில் பிரதமர் மோடிக்கு அன்னாஹசாரே கடிதம் எழுதினார்.
அதன்படி அவர் காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ம் தேதி தனது உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் தொடங்கினார்.
அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அக்கிராமத்தில் நேற்று வேலைநிறுத்தமும் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் போராட்டம் இன்றுடன் 3-வது நாளை எட்டியது. உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் அன்னாஹசாரேவிற்கு இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னாஹசாரே உடல்நலனை டாக்டர்கள் தொடர்ச்சியாக பரிசோதித்து வருகிறார்கள்.