ரபேல் விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? மோடிக்கு ராகுல் காந்தி சவால்
ரபேல் விவகாரம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் இன்று ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரச்னை எழுப்பினார். அப்போது, ரபேல் விவகாரத்தில் தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்காமல் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்'' என்று பரபரப்பாக பேசினார்.
இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- “ரபேல் விவகாரத்தில் செய்யப்பட்ட ஊழல் குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி தயாரா? எனக்கு 20 நிமிடங்கள் மட்டுமே தாருங்கள். அவருடன் நான் விவாதம் செய்கிறேன். ஆனால் இதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது” இவ்வாறு அவர் கூறினார்.