123 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
மக்களுக்கு 123 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் மாநிலங்களவையில் அளித்துள்ள பதிலில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121,08,54,977 ஆகும். நவம்பர் 30, 2018 வரையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 122.90 கோடி ஆதார் கார்டுகளை வழங்கியுள்ளது.
5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 6.71 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 5 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு 29.02 கோடி கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஒரு வருடத்திற்குள் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2,08,98,228 ஆகும். எஸ்ஆர்எஸ் (மாதிரி பதிவு அமைப்பு) சமீபத்திய தகவல்கள் படி 2016-ம் ஆண்டிற்கான பிறப்பு விகிதம் 20.4 ஆகவும், இறப்பு விகிதம் 6.4 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஆர்எஸ், நாடெங்கிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புறத் தொகுதிகள் அடிப்படையில் தொடர்ச்சியான ஆய்வு பணியை மேற்கொள்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.