370 அடி ஆழ சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள்: 20 நாட்களாக தொடரும் மீட்பு பணி
மேகாலயாயாவில் 370 அடி ஆழ நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.
சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.
தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 13-ந் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது.
இதனால், சுமார் 15 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்கள் எலி பொந்து பகுதியில் இருப்பதாக தெரிகிறது. அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.
இந்நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு, தீயணைப்புதுறையினர், கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுரங்கத்திற்குள் பம்புகளை இறக்கி நீரை வெளியேற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.