சபரிமலை விவகாரம்: ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுத்தனர்.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு ஆர்வம் காட்டிய நிலையில், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களை அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில் இந்து அமைப்புகளின் போராட்டங்களுக்கு எதிராக கேரள மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பாறசாலை முதல் காசர்கோடு வரையிலான 630 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையோரமாக லட்சக்கணக்கான பெண்கள் அணிவகுக்கும் வகையிலான "வனிதா மதில்" நிகழ்ச்சி, இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள அமைச்சர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.